
கேரள மாநிலம், கொச்சியில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின்போது கல்வீச்சில் ஈடுபட்டவர்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில், சிலர் காயமடைந்தனர்.
முதல்வர் பினராயி விஜயனிடம் வன்முறை தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள ஆளுநர் பி.சதாசிவம் கோரினார்.
சபரிமலை சந்நிதானத்தில் 2 பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை மாநிலம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜகவும், சில ஹிந்து அமைப்புகளும் அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடைபெற்றது. எர்ணாகுளம் உள்பட சில நகரங்களில் கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன.
எனினும், மாநிலத்தின் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.
திருச்சூரில் பாஜகவினருக்கும், இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினருக்கும் (எஸ்டிபிஐ) இடையே கைகலப்பு ஏற்பட்டது.
பத்தனம்திட்டா மாவட்டம், பந்தளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாடியிலிருந்து அக்கட்சியினர் சிலர் புதன்கிழமை கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், படுகாயமடைந்த 55 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த அவர் இதயச் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
சபரிமலை கர்மா சமிதி அமைப்பு முன்னெடுத்த பேரணியில் அந்த நபர் பங்கேற்றார். இதுதொடர்பாக 9 பேர் அடையாளம் காணப்பட்டு, அதில் 2 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் கூறினர்.
போராட்டக்காரர்களால் தாக்குதலுக்கு ஆளானதற்கு கண்டனம் தெரிவித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
266 பேர் கைது: வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். கோழிக்கோடு, மலைப்புரம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வன்முறை ஏற்பட்டது. தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீஸார் கலைத்தனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக 266 பேர் கைது செய்யப்பட்டனர். 334 பேர் காவலில் வைக்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
வன்முறையைத் தூண்டுகிறது பாஜக-கேரள முதல்வர்: சபரிமலையில் பெண்கள் இருவர் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வன்முறையைத் தூண்டி விடுகின்றன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கேரளத்தில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அந்த 2 பெண்களும் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று விடப்படவில்லை. பக்தர்களுடன்தான் அவர்களும் மலையேறி சென்றனர். அவர்களுடன் வந்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நடத்தப்படும் போராட்டம் போன்று உள்ளது. வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்நிதானத்துக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்தால் தலைமை தந்திரி தனது பொறுப்பை ராஜிநாமா செய்துவிட்டு செல்லட்டும் என்றார் பினராயி விஜயன்.
காங்கிரஸ் தாக்கு: வன்முறை காரணமாக கேரளத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டியது.
அறிக்கை கோரினார் ஆளுநர்: வன்முறை தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் கேரள ஆளுநர் பி.சதாசிவம் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரினார்.
சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், கலவரம் காரணமாக ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பாதிப்புகள் தொடர்பான அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் அளிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஆளுநர் சதாசிவத்தை சந்தித்து வன்முறை தொடர்பாக தனது கவலையைப் பதிவு செய்தார்.
சபரிமலை தொடர்புடைய மனு: உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புது தில்லி, ஜன. 3: சபரிமலையில் பெண்கள் இருவர் சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து கோயில் நடையை அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்திரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களுடன் சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.