
சிபிஐ அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக கவலை தெரிவித்த நாடாளுமன்றக் குழு, அந்தப் பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியதை அடுத்து, இருவரும் தங்களது பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
சிபிஐ அமைப்பு முழு நேரத் தலைமை இல்லாமல் செயல்பட்டுவரும் நிலையில், நாடாளுமன்றக் குழு இவ்வாறு கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பணியாளர், பொதுமக்கள் குறைகள், சட்ட மற்றும் நீதித் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்ததாவது: சிபிஐ அமைப்பின் பல்வேறு நிலையில் இருக்கும் காலிப்பணியிடங்கள், ஒரு பிரச்னையாகவே நீடித்து வருகிறது.
உரிய விதிகளுக்கு இணங்கி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, அதில் காலதாமதம் கூடாது. தற்போது சிபிஐ அமைப்பின் நிர்வாக நிலையில் 16 சதவீதமும், சட்ட அதிகாரிகள் நிலையில் 28 சதவீதமும், தொழில்நுட்ப அதிகாரிகள் நிலையில் 56 சதவீதமும் காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதவிர, சிறப்பு இயக்குநர், கூடுதல் இயக்குநருக்கான 4 பணியிடங்களில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய காலிப்பணியிடங்களால் வழக்கு விசாரணைகளில் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக சிபிஐ அமைப்பே தெரிவித்துள்ளது.
சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த அமைப்பு போதிய அதிகாரிகள் இன்றி தடுமாறக் கூடாது.
மாநில காவல்துறை, மத்திய துணை ராணுவப் படைகள், உளவுப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றும் திறமையான அதிகாரிகள் சிபிஐக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். தடய அறிவியலுக்கான நிபுணத்துவம் பெற்ற சர்வதேச மையம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவு, நீண்டகாலமாக மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
அந்த அமைப்பை நிறுவ, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, மத்திய உள்துறை மற்றும் சிபிஐ அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.