
சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ரக அச்சுக் காகிதங்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கப்பட மாட்டாது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இது தொடர்பாக வர்த்தக அமைச்சகத்தின் விசாரணைப் பிரிவான வர்த்தக குறைதீர்ப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து உயர்ரக காகிதங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவற்றின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, வர்த்தக குறைதீர்ப்பு இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து அந்த இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில், உள்நாட்டில் உயர்ரக காகித உற்பத்தியை பாதிக்கும் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து அவை இறக்குமதி செய்யப்படவில்லை. எனவே, அவற்றின் மீது மிகை இறக்குமதி வரி விதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், இந்த வகை காகிதங்கள் இந்தியாவில் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதனால், இறக்குமதி மூலம் தேவையைப் பூர்த்தி செய்வது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிமர் மேல்பூச்சு உள்ள இந்த உயர்ரக அச்சுக் காகிதங்கள் பத்திரிகைகள், புத்தகம், மாதாந்திர காலண்டர், லேபிள், சில வகை உறைகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க அதிகஅளவில் பயன்படுத்தப்படுகின்றன.