
கர்நாடக மாநிலத்தில் கடும் குளிர் நிலவுவதையொட்டி, ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காயும் பொதுமக்கள்.
தட்பவெப்ப மாறுதலால் கர்நாடகம் குளிரில் நடுங்குகிறது.
கர்நாடகத்தில் பெங்களூரு குளுமையான மாநகராகும். அதுவும் குளிர்காலம் வந்துவிட்டால், பெங்களூரில் அதிகளவில் குளிர்காற்று வீசும். குளிர்காலத்தில் பெங்களூரில் குறைந்தபட்ச தட்பவெப்பம் வழக்கமாக 13 டிகிரி செல்சியஸாக இருக்கும். நிகழாண்டில் இது 10 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. இதனால் பெங்களூரில் மக்கள் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் தட்பவெப்பம் மேலும் குறைவதால், வயதானோர், குழந்தைகள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பெங்களூரைக் காட்டிலும் ஹாசன், வட கன்னடம், சிக்கமகளூரு, பெலகாவி, கலபுர்கி, பாகல்கோட், விஜயபுரா மாவட்டங்களில் தட்பவெப்பம் 4.50 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. பெலகாவி மாவட்டத்தின் காரஜ், ஹுக்கேரியில் வியாழக்கிழமை குறைந்தபட்சமாக 4.50 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. மாநிலத்தின் 89.90 சத நிலப்பரப்பில் குறைந்தபட்ச வெப்ப நிலை 8 டிகிரி செல்சியஸ் முதல் 14 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதேநிலை அடுத்த 2-3 நாள்களுக்குத் தொடரும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் அதிகளவில் மரங்களால் சூழ்ந்துள்ள ஹெசரகட்டாவில் குறைந்தபட்சமாக தட்பவெப்பம் 9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்த அளவு தட்பவெப்பம் இதுவாகும். தார்வாட், விஜயபுரா, பெலகாவி, பீதர், கலபுர்கி, சிவமொக்கா உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் நடுங்கும் குளிரில் மக்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. கர்நாடகத்தின் மத்தியப் பகுதி, தென் கர்நாடகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தட்பவெப்பம் குறைந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் குளிர் காற்றும் வீசுவதால், மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2008, 2012-ஆம் ஆண்டுகளில் குளிர்காலத்தின்போது பெங்களூரில் தட்பவெப்பம் 12 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. அதன்பிறகு, தற்போது பெங்களூரு கெம்பேகெளடா பன்னாட்டு விமான நிலையத்தில் 11.1 டிகிரி செல்சியஸ், எச்ஏஎல் விமான நிலையத்தில் 11.5 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் பதிவாகியிருந்தது.
சிக்கஜாலாவில் 10.7 டிகிரி செல்சியஸ், எலஜஹங்கா மற்றும் கெங்கேரியில் 10.3 டிகிரி செல்சியஸ், தாவணகெரேயில் 10.1 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் நிலவியது.
வரலாற்று ரீதியாக ஜனவரி மாதத்தில் பெங்களூரில் 1884-ஆம் ஆண்டு ஜன.13-ஆம் தேதி 7.8 டிகிரிசெல்சியஸ் தட்பவெப்பம் காணப்பட்டது. மத்திய இந்தியாவின் கிழக்குப் பகுதி மற்றும் தீபகற்ப இந்தியாவின் உட்பகுதியில் குளிர்காற்று அடுத்த 1-2 நாள்களுக்கு வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவு கர்நாடகத்திலும் உணரப்படும் என்றும் தெரிவிக்கிறது.