
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்குமாறு மகாராஷ்டிர மாநில பாஜக எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மகாராஷ்டிர மாநில பாஜக எம்.பி.க்களுடன் அமித் ஷா, தில்லியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஒருவர், பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரத்தில் சிவசேனைக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமித் ஷா கூறினார்.
ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையெனில், தனித்துப் போட்டியிடவும் தயாராக வேண்டும் என்று எங்களை கேட்டுக் கொண்டார். தேவைப்பட்டால், மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என அமித் ஷா கூறினார் என்று அவர் தெரிவித்தார்.
மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சிவசேனைக் கட்சி, மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி வரும் காங்கிரஸ் கட்சி, இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த கோரிக்கைக்கு சிவசேனைக் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது.
மத்திய அரசை சிவசேனைக் கட்சி தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் இந்தச் சூழலில்தான், தனித்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மகாராஷ்டிர மாநில பாஜக எம்.பி.க்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.