
நவோதயா பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும், உறைவிடப் பள்ளிகளான நவோதயா பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 37 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக அண்மையில் புள்ளி விவரங்களுடன் செய்திகள் வெளியாகின.
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. விப்லவ் தாக்குர் இதுதொடர்பாக வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார். மாணவர்களின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிய குழு அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதில் அளிக்கையில், இதை ஆராய்வதற்காக மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீதம் தேர்ச்சி விகிதம் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளைக் காட்டிலும் 98 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் நவோதயா பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பிற கேள்விகள்: மேகாலய மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் நிலவும் கால தாமதம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் கேள்வி எழுப்பினார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மணீஷ் குப்தா பேசுகையில், தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.