
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மற்றும் ஒடிஸா மாநிலங்களுக்கு முறையே வெள்ளி மற்றும் சனிக்கிழமை பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் அவர் தொடங்கி வைக்கும் திட்டம் குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிரதமர் மோடி, தெங்னெளபால் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியையும், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் அணையையும், அதே மாவட்டத்தில் இந்திய உணவுக் கழகத்தின் உணவு சேமிப்பு கிடங்கையும்,
உக்ருல் மாவட்டத்தில் நீர்தேக்கப் பகுதியையும் திறந்து வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, சுராசந்திரபூர் மண்டலத்துக்கான மேம்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம், காங்போக்பி மாவட்டத்தில் பசுமை சுற்றுலாப் பகுதி திட்டம், லாம்புயி உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத் திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
ஒடிஸாவில்...: சனிக்கிழமை ஒடிஸா செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரூ.4,500 கோடி மதிப்பிலான மத்திய அரசு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:
ஒடிஸாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ரிமுலி-கொய்டா இடையே சுமார் ரூ.828 கோடி மதிப்பில் 43.2 கி.மீட்டர் நான்கு வழிச்சாலை, சிங்காரா-பிஞ்சாபஹால் இடையே ரூ.1,313 கோடி மதிப்பில் 104.2 கி.மீ. நீள நான்கு வழிச்சாலை, கொய்டா-ராஜ்முண்டா இடையே 53.2 கி.மீ. நீளத்துக்கு ரூ.1,176 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு வழிச்சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பலாசோர்-ஹால்தியா-
துர்காபூர் பகுதியில் ரூ.1,080 கோடி மதிப்பிலான, இந்தியன் ஆயில்
நிறுவனத்தின் குழாய் வழி எரிவாயு விநியோக திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார் என்று அதிகாரிகள் கூறினர்.