
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் பகுதியில் நடைபெற்ற கும்பல் வன்முறையில் காவல் ஆய்வாளர் மற்றும் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தவர்களில் ஒருவரான யோகேஷ் ராஜை போலீஸார் கைது செய்தனர்.
புலந்த்சாஹர் அருகே மஹாவ் கிராமத்தில் கடந்த டிச. 3ஆம் தேதி பசுக்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்கராவதி காவல் நிலையத்தை வன்முறை கும்பல் முற்றுகையிட்டது. அதில் ஒரு பிரிவினர் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சுமித்குமார் (20) என்ற இளைஞர் இறந்தனர்.
வன்முறை சம்பவம் தொடர்பாக 27 பேர் மீதும், அடையாளம் தெரியாத 60 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
பசுவதையைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட சதீஷ், வினீத் மற்றும் பசுவதை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அஸார் ஆகியோர் புதன்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருந்தனர்.
இதனிடையே, வன்முறைக்கு முக்கிய காரணமாக கருதப்பட்ட பஜ்ரங் தளத்தை சேர்ந்த நிர்வாகி யோகேஷ் ராஜ் என்பவர் கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்தார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலை-91பகுதியில் குர்ஜா டி-பாயின்ட் பகுதியில் வைத்து யோகேஷ் ராஜை போலீஸார் கைது செய்தனர்.
அவரை போலீஸார் மருத்துவ பரிசோதனைக்குள்படுத்திய பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பாக, மொத்தம் 31 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே, கைது செய்யப்பட்ட 27 பேர் மீதும், வெடிப்பொருள்கள் வைத்திருந்தது, வெடிப்பொருள்களால் தாக்குதல் நடத்தியது, தீ வைத்து வன்முறையை பரப்பியது, வெடி விபத்துகளை ஏற்படுத்துவது, கொலை முயற்சி, கொலைக்குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.