
தேர்தல் ஆணையம் விரும்பினால், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் மாநில அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆளுநர் ஆட்சி கடந்த மாதம் 19-ஆம் தேதியோடு நிறைவடைந்ததையொட்டி, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையை மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்தார்.
கடைசியாக கடந்த 1996-ஆம் ஆண்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்த விவாதத்தை மாநிலங்களவையில் வியாழக்கிழமை தொடங்கிவைத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
தேர்தல் நடத்தாதது ஏன்?: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை பாஜக சீர்குலைத்து வருகிறது. பிடிபியுடன் முதலில் கூட்டணி அமைத்த பாஜக, பின்னர் தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அதன்பிறகு தேர்தல் நடத்தாமல், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியது ஏன்?
மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைத்த தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி, காங்கிரஸ் ஆகியவை குறித்து மக்களிடையே பின்னடைவை ஏற்படுத்த 4 மாத காலங்களை எடுத்துக்கொண்டு, அது நடக்காது என்று தெரிந்தவுடன் ஆளுநரின் மூலம் மாநில சட்டப்பேரவையை மத்திய அரசு கலைத்துள்ளது.
மாநில மக்களிடையே பிரிவினை குறித்த உணர்வு மேலோங்கிக் காணப்படுகிறது. இதற்கு பாஜகவே முழுக் காரணமாகும். மாநிலத்தின் எல்லைப் பகுதியில், கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இதனால், பெருவாரியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மாநிலத்தில் போதுமான வேலைவாய்ப்புகளை பாஜக அரசு உருவாக்கித் தரவில்லை. இதனால், மாநில இளைஞர்கள் பயங்கரவாதக் குழுக்களில் இணைவது அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தத் தயார்: இதற்குப் பதிலளித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது:
மற்ற கட்சிகள் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியை பாஜக ஒருபோதும் தடுக்கவில்லை. மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்புதான், அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆளுநர் ஆட்சி முடிவடைந்த பிறகும், மாநிலத்தில் ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் உரிமை கோரவில்லை என்று ஆளுநர் தெரிவித்ததையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மாநிலத்தில் பிரிவினை குறித்த உணர்வை பாஜக ஏற்படுத்தவில்லை. சுதந்திரம் பெற்றது முதலே மக்களிடையே நிலவிவரும் அந்த உணர்வைக் குறைக்க பாஜக முயன்று வருகிறது. ஹுரியத் அமைப்புகளுடன் அனைத்துக் கட்சி உறுப்பினர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், மாநில கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்த அமைப்புகள் கூடத் தயாராக இல்லை. முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியும் இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.
தேர்தல் ஆணையம் விரும்பினால், வரும் மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. தேர்தல் நடத்தப்படுவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பாஜக மட்டும் பொறுப்பாகாது:
பின்னர், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், கடந்த ஆண்டுகளில் காங்கிரஸும் மாநிலத்தை ஆட்சி செய்துள்ளது. மக்களிடையே காணப்படும் பிரிவினை உணர்வுக்கு பாஜக மட்டுமே பொறுப்பு என்று அக்கட்சி குற்றம் சாட்டமுடியாது என்றார்.