
மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் தொடுத்த வழக்கில் விசாரணையை எதிர்கொள்ளுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அகமது படேல், கடந்த 2017-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வெற்றியை எதிர்த்து, இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பல்வந்த் சிங் ராஜ்புத், குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 2 பேர் அளித்த வாக்குகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அந்த வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால், தாம் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும் பல்வந்த் சிங் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வாக்கெடுப்புக்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூரில் உள்ள விடுதியில் அகமது பேடல் தங்க வைத்திருந்தது, அவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு இணையானது என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் அகமது படேல் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-இல் நிராகரித்து விட்டது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அதைத் தொடர்ந்து, அவரது கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.
பின்னர், அகமது படேல் தாக்கல் செய்த புதிய மனுவையும் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி நிரகாரித்து விட்டது.
இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. எனவே, அகமது படேல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அகமது படேலின் மனுவை அடுத்த மாதம் விசாரிப்பதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக, இரு தரப்பினரும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தனர்.