
மேற்கு வங்கத்தில் பாஜகவினர் ரத யாத்திரை நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பாஜகவின் மனுவை வரும் 8ஆம் தேதி விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் கடந்த டிச.7ஆம் தேதி முதல் 3 கட்டமாக ரதயாத்திரை நடத்த அம்மாநில பாஜகவினர் மேற்கு வங்க அரசிடம் அனுமதி வழங்கக் கோரியிருந்தனர். மாநில அரசு அனுமதி வழங்க மறுத்ததையடுத்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் மனுத்தாக்கல் செய்தனர். மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்க இருந்த ரதயாத்திரை மத, இன மோதல்களுக்கு வழிவகுக்கும் எனக்கூறி மேற்கு வங்க அரசு ரதயாத்திரை நடத்த அனுமதி மறுத்து விட்டது. இதை தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு ரதயாத்திரைக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்கக் கோரி பாஜக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்நிலையில், வரும் 8ஆம் தேதி பாஜகவின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தலைமை நீதிபதி கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.