
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் எழுப்பிய அனைத்து பிரச்னைகளுக்கும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்து விட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்தத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை; எதிர்க்கட்சி தலைவர்களின் எண்ணத்தில்தான் பிரச்னை உள்ளது என்றும் தெரிவித்தார்.
மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது, பிரான்ஸ் அதிபர் ஹோலந்தேவுடன் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி பேசியதை விடியோவாக அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து சுஷ்மா பேசுகையில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தற்போது எந்த சர்ச்சையும் இல்லை என்று நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் எழுப்பிய அனைத்து பிரச்னைகளுக்கும் உச்சநீதிமன்றம் தெளிவாக பதிலளித்து விட்டது. அதையும் மீறி பிரச்னை உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு யாராலும் பதிலளிக்க முடியாது என்றார்.
அதையடுத்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அண்மையில் இந்தியா வந்திருந்தபோது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்று சிவசேனை கட்சியின் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுஷ்மா, அவரிடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, ரஃபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், விவாதம் தேவையில்லை எனக் கருதினார் என்றார்.
எனினும், அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பதில் திருப்திகரமானதாக இல்லை என்று கூறி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம், ஜெய்தாப்பூரில் இந்தியாவும், பிரான்ஸும் இணைந்து உருவாக்கும் அணுமின் நிலையம் குறித்த கேள்விக்கு, 1650 மெகா வாட் திறன் கொண்ட 6 அணுமின் உலைகளை அமைப்பதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு பிரான்ஸுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதான் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக இருக்கும் என்று சுஷ்மா தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிவதால்(பிரெக்ஸிட்), அங்கிருக்கும் இந்தியர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. குமார் கெட்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுஷ்மா, பிரெக்ஸிட் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம்தான் விவாதம் நடத்த இருக்கிறார்கள். அதனால் தற்போது அதுகுறித்து முடிவெடுக்க இயலாது. பிரெக்ஸிட் தொடர்பான மொத்த பணிகளும் நிறைவடைய 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை எவ்வித பிரச்னையும் இல்லை என்றார்.