
கோப்புப் படம்
மக்களவையில் இன்று ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ரஃபேல் விவகாரத்தில் உண்மைகளைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தேசியப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். அதற்காக உண்மையை விட்டுவிட்டு ஓடி விட முடியாது என்று தெரிவித்தார்.
முதல் ரஃபேல் போர் விமானம் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்துவிடும், 36 ரஃபேல் போர் விமானங்கள் 2022ல் இந்தியாவிடம் வழங்கப்படும்.
நமது வடக்கு மற்றும் மேற்கு திசை நாடுகளுடன் நாம் போர் அபாய நிலையில் இருக்கிறோம். உரிய நேரத்தில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது என்பது நாட்டுக்கு மிக முக்கியமானது. ஆயுதக் கொள்முதலின் அவசரத் தேவையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான ஆயுதங்களை வாங்குவது மிகவும் அவசியம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எனது விளக்கத்தைக் கேட்க தயாராக இல்லை. இது இரக்கமில்லாததையேக் காட்டுகிறது.
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதத் தளவாடங்களை வாங்குவது என்பது மிகவும் முக்கியம் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.