
ராமர் கோயில் விவகாரத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களை ஏமாற்ற முயல்வதாக சிவசேனை கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், பெரும்பான்மை பெற்றிருக்கும் பாஜக ஆட்சியிலேயே ராமர் கோயில் கட்டப்படவில்லை எனில், வருங்காலத்தில் கோயில் கட்டப்படுமா? என்று சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் ராமர் கோயில் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இது குறித்து, சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
கடந்த 1991-92 ஆம் ஆண்டுகளில், ராமர் கோயிலுக்காக நடந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கான ஹிந்து கர சேவகர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ஹிந்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். ராமர் கோயில் விவகாரத்தில், உச்சநீதிமன்றமே இறுதி முடிவு எடுக்கும் என்றால், அந்த வன்முறைகளும், கிளர்ச்சிகளும் எதற்காக நடைபெற்றன?
கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக கோரி வருகிறது. அப்படியானால், ராமர் கோயிலுக்காக நடைபெற்ற வன்முறைக்குப் பொறுப்பேற்று, பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாரா?
பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ராமர் பெயரைக் கூறியே பிரசாரத்தில் ஈடுபட்டன. அதன் காரணமாகவே மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், பெரும்பான்மை பெற்றிருக்கும் பாஜகவின் ஆட்சிக் காலத்திலேயே ராமர் கோயில் கட்டப்படவில்லை எனில், வருங்காலத்தில் கோயில் கட்டப்படுமா? என்று சந்தேகம் எழுகிறது.
இந்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன், ராமர் கோயில் கட்டப்படவில்லை எனில், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் மக்களை ஏமாற்ற முயல்வதுபோல் இருக்கும். குஜராத்தில், சர்தார் வல்லபபாய் படேலுக்கு பிரமாண்ட சிலையை பாஜக அரசு திறந்துவைத்தது. ஆனால், வல்லபபாய் படேலைப் போன்று, ராமர் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடி சாதுரியமாகச் செயல்படவில்லை.
இது, வரலாற்றின் பக்கங்களில் நிச்சயம் இடம்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.