
பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்; இதனை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2050-ஆம் ஆண்டில் இந்தியாவில் விவசாய உற்பத்தி குறையும், குறிப்பாக கோதுமை உற்பத்தி 23 சதவீதம் வரை குறையும் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முகநூலில் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் வரும் காலத்தில் வேளாண்மை உற்பத்தி வெகுவாக குறையும் என்று மத்திய வேளாண்மை துறை அமைச்சகமே கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த அரசு விவசாயிகளையும், வேளாண்மைத் துறையையும் தொடர்ந்து புறக்கணித்து வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. இப்போது, விவசாயிகளை உரிய முறையில் கவனித்து, அவர்களை ஊக்குவிக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்னை ஏற்படும். இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பிரதமர் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். விவசாயிகளை பிரதமர் புறக்கணிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இது தவிர, ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பதிலளிக்க மறுத்து வருவதாக விமர்சித்து ராகுல் சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ளார்.
அதில், ரஃபேல் விமான ஒப்பந்தத்தை மேற்கொண்டது இந்த அரசுதான். அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்குமாறு பிரதமர் மோடியிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். ரஃபேல் குறித்து விளக்கம் அளிப்பது புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு தேர்வு எழுதுவதுபோன்று மிக எளிதானது. ஏனெனில், ஒப்பந்த விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்ததுதான். புதிதாக எதையும் மத்திய அரசு கூறத் தேவையில்லை. எனினும், இது தொடர்பாக விளக்கமளிக்க மறுத்து பிரதமர் ஓடி விடுகிறார்.
இதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? முக்கியமாக, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான கோப்புகளை முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது படுக்கை அறையில் பத்திரமாக வைத்திருப்பது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.