அவையை வழிநடத்தும் விவகாரத்தில் அபாண்டமாக குற்றம்சாட்டு: வெங்கய்ய நாயுடு வேதனை

மாநிலங்களவை அலுவல்களின்போது இடையூறு ஏற்படுத்தும் உறுப்பினர்களை சரிவர கையாளாததாக தன் மீது நியாயமற்ற வகையில் சில எம்.பி.க்கள் குற்றம்சாட்டுகின்றனர்
அவையை வழிநடத்தும் விவகாரத்தில் அபாண்டமாக குற்றம்சாட்டு: வெங்கய்ய நாயுடு வேதனை


மாநிலங்களவை அலுவல்களின்போது இடையூறு ஏற்படுத்தும் உறுப்பினர்களை சரிவர கையாளாததாக தன் மீது நியாயமற்ற வகையில் சில எம்.பி.க்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்று அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவை உறுப்பினர் ஒருவர் (பெயரை குறிப்பிடாமல்) தன் மீது குற்றம்சாட்டி அளித்த நேர்க்காணல் நகலை, மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை காண்பித்தார்.
பின்னர் அதுகுறித்து அவர் பேசியதாவது:
கடந்த புதன்கிழமை அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதும், அதன் பிறகும் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டதும் கவலைக்குரியதாகும். உறுப்பினர்கள் அவைத் தலைவரின் அறிவுறுத்தல்களை கேட்டு நடக்க வேண்டும்.
அவையை முறையாக வழிநடத்த உரிய நடவடிக்கைகளை நான் மேற்கொள்ளவில்லை என்று உறுப்பினர்களின் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்களிடம் 10 முறைக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன்.
அத்துடன் இந்த விவகாரத்தை அவையில் இருக்கும் சில தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கூறியுள்ளேன். 
அவையில் பல்வேறு விவகாரங்கள் விவாதிப்பதை தடுக்கும் வகையில் அமளியில் ஈடுபடுவதும், பின்னர் அவை ஒத்திவைக்கப்படுவதும் திட்டமிட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது. அது யாரால் திட்டமிடப்படுகிறது?
தங்கள் மீது வீணாக குற்றம்சாட்டப்படுவதாக கூறும் காங்கிரஸ் கட்சி, அவை செயல்படவே தாங்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளது. அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்தேன். அப்போது, அவர்களை சமாதானம் செய்ய விரும்புதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தனர். 
அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க கடுமையாக முயற்சித்தபோதும், சரிவர செயல்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறேன். குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைய 3 நாள்களே உள்ள நிலையில், பல்வேறு முக்கிய மசோதாக்கள், தீர்மானங்கள், அவசரச்சட்டங்கள் நிலுவையில் உள்ளன. 
எனவே, எஞ்சிய நாள்களில் அவை அலுவல்கள் நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டத் தொடரின் 14 நாள்கள் அமளியால் பாதிக்கப்பட்டுள்ளது நல்லதல்ல என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com