ஆப்கன் நூலகத்துக்கு இந்தியா அளிக்கும் நிதியுதவியால் என்ன பயன்?: டிரம்ப் கேள்வி

போர்ச் சூழல் நிறைந்த நாடான ஆப்கானிஸ்தானில் நூலகம் நடத்துவதற்கு இந்தியா நிதியுதவி அளிப்பதால் ஒரு பலனும் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஆப்கன் நூலகத்துக்கு இந்தியா அளிக்கும் நிதியுதவியால் என்ன பயன்?: டிரம்ப் கேள்வி


போர்ச் சூழல் நிறைந்த நாடான ஆப்கானிஸ்தானில் நூலகம் நடத்துவதற்கு இந்தியா நிதியுதவி அளிப்பதால் ஒரு பலனும் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட அண்டை நாடுகள் போதிய பங்களிப்பு அளிக்கவில்லை என்று விமர்சிக்கும் விதமாக அவர் இதைத் 
தெரிவித்தார். 
வெளிநாடுகளின் பாதுகாப்புக்காக அமெரிக்கா சார்பில் செலவிடப்படும் நிதியை குறைத்துக் கொள்வது என்ற கொள்கை முடிவை டிரம்ப் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், இந்த ஆண்டில், முதல்முறையாக அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி புதன்கிழமை டிரம்ப் ஆலோசித்தார். 
அப்போது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக அமெரிக்காவைப் போல பல கோடி டாலர்களை முதலீடு செய்யாமலேயே உலகத் தலைவர்கள் பலர், அவர்களது பங்களிப்பு குறித்து பெரிய அளவில் பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், அதற்கு உதாரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கு இந்தியா, பாகிஸ்தான், ரஷியா போன்ற அண்டை நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். டிரம்ப் மேலும் பேசியதாவது:
நான் மிகவும் நெருக்கமுடன் உள்ள இந்தியாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வைத்து உங்களுக்கு ஓர் உதாரணத்தை சொல்ல முடியும். ஆப்கானிஸ்தானில் நூலகம் ஒன்றை கட்டியிருப்பதாக அவர் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். நூலகமா! ஆப்கானிஸ்தானில் அதைப் போல நாம் செய்த விஷயங்களைப் பட்டியலிட்டால் 5 மணி நேரம் பேசிக் கொண்டிருக்கலாம். 
மோடி மிகவும் சாதுர்யமானவர். நாம் ஏதாவது சொல்ல வேண்டுமானால், அந்த நூலகத்துக்காக நன்றி சொல்லலாம். ஆனால், அதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது என்றார் அவர்.
தலிபான்களோடு போரிட ரஷியா ஏன் அங்கு வரவில்லை? இந்தியா ஏன் வரவில்லை? பாகிஸ்தான் ஏன் வரவில்லை? ஆனால், நாம் பிற தேசங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கண்டனம்: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ள விமர்சனத்தை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் இதுகுறித்து கூறும்போது, இந்தியப் பிரதமர் பற்றி அமெரிக்க அதிபர் குறிப்பிட்டதை ஏற்க முடியாது. இதற்கு இந்திய அரசு உரிய முறையில் பதில் அளிக்கும் என்று நம்புகிறோம். கடந்த 2004-ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட சாலைத் திட்டங்கள், அணைத் திட்டங்கள் மற்றும் ரூ. 20,000 கோடி அளவுக்கான நிதியுதவி ஆகியவை குறித்து அமெரிக்காவிடம் மத்திய அரசு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com