தில்லி பேரவையில் அமளி: 3 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி,


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி, பின்னர் அதில் ஆம் ஆத்மி அரசு திருத்தம் செய்ததாக குற்றம்சாட்டி பாஜக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை கூடிய தில்லி பேரவைக் கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, விஜேந்தர் குப்தா, ஜெகதீஷ் பிரதான், மன்ஜீந்தர் சிங் சிர்சா ஆகிய மூன்று பாஜக எம்எல்ஏக்களையும் அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டார். 
தில்லி சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் வியாழக்கிழமை அவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல் தலைமையில் தொடங்கியது. அப்போது, அவையில் நிறைவேற்றப்பட்ட ராஜீவ் காந்தி தொடர்பான தீர்மானத்தில், முறைகேடான வகையில் மாற்றங்களை அனுமதித்த தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயலை நீக்கக் கோரி பாஜக எம்எல்ஏ மன்ஜீந்தர் சிங் சிர்சா நோட்டீஸ் அளித்தார். ஆனால், 14 நாள்களுக்கு முன்பு அனுமதி பெற்றே நோட்டீஸைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறி ராம்நிவாஸ் கோயல் மறுப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தில்லி பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்தர் குப்தா, ஜெகதீஷ் பிரதான், மன்ஜீந்தர் சிங் சிர்சா ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். சிர்சா, அவையின் மையப் பகுதியில்அமளியில் ஈடுபட்டார். அவைத் தலைவர் பல முறை கேட்டுக்கொண்டும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மூவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டததுடன், அவையை 15 நிமிஷங்களுக்கு ஒத்தி வைத்தார். 
சிர்சா புகார்: சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிர்சா, சீக்கியர்களின் அடையாளமான தான் அணிந்துள்ள தலைப்பாகையை அவைக் காவலர்கள் அகற்றியதாக குற்றம் சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com