பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை ராணுவம் துன்புறுத்தக் கூடாது: மெஹபூபா முஃப்தி

பயங்கரவாதத்தில் ஈடுபட்டோரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு படையினரும், காவல் துறையும் தொந்தரவு அளிக்கக்கூடாது என்று ஆளுநர் பாதுகாப்பு
பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை ராணுவம் துன்புறுத்தக் கூடாது: மெஹபூபா முஃப்தி


பயங்கரவாதத்தில் ஈடுபட்டோரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு படையினரும், காவல் துறையும் தொந்தரவு அளிக்கக்கூடாது என்று ஆளுநர் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உயிரிழந்த பயங்கரவாதி ஒருவரின் குடும்பத்தினரை மெஹபூபா வியாழக்கிழமை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், அவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்துவது தவறு. ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் இதுபோன்ற செயல்களை விரும்பி செய்திருக்க மாட்டார்கள். பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை துன்புறுத்துமாறு அவர்களுக்கு வேறு எங்கிருந்தோ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டோரின் குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது என்று பாதுகாப்பு படையினருக்கு ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட வேண்டும். நான் முதல்வராக இருந்தபோது இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தேன் என்று கூறினார்.
இதற்கு முன்னரும் புல்வாமா மாவட்டம் சென்று உயிரிழந்த பயங்கரவாதியின் குடும்பத்தினருக்கு மெஹபூபா ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஒமர் அப்துல்லா, பாஜக விமர்சனம்: மக்களிடம் இழந்த நற்பெயரை மீண்டும் பெறவே முஃப்தி இவ்வாறு பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை சந்திக்கிறார் என்று தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 2015-ஆம் ஆண்டில் மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆபரேஷன் ஆல் அவுட் நடவடிக்கையின் கீழ் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளைக் கொலை செய்யச் சொன்னவர்களே தற்போது அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கின்றனர். பாஜக ஆதரவைப் பெறுவதற்தாக அவர் பயங்கரவாதிகளைக் கொல்ல உத்தரவிட்டார். தற்போது மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை சந்தித்து வருகிறார் என்று தெரிவித்திருந்தார். இதனிடையே, வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இந்த மாதிரியான செயல்களில் முஃப்தி ஈடுபட்டு வருகிறார் என்று பாஜக விமர்சித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com