முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு 

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 
முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு 

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை அறிவிக்கக் கோரி கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த ரசூல் ஜாய், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அணையின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிக்க நிபுணர்கள் இல்லை என்பதால், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை 8 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் எனத் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜி. உமாபதி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

ரசூல் ஜாய் தாக்கல் செய்துள்ள மனுவில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2014, மே 7-இல் அளித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய அவர் முயற்சிக்கிறார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பதிலும், அணைக்குக் கீழ்ப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதிலும் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது. மேலும், தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணையை மட்டும் நம்பியுள்ள வறட்சி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும் மாநில அரசு கடமைப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீரைத் திறந்துவிடுவதில் தமிழக அரசு முறையாக கையாளவில்லை என்ற மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இது கள நிலவரத்துக்கு மாறாக உள்ளது.

அணையைப் பலப்படுத்தும் பணிகள் மத்திய நீர் ஆணையம், தமிழக-கேரள அரசுகள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது ஆகியவை தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் கேரளம் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறது. அணையில் 152 அடி வரை நீரைத் தேக்குவதற்கு கேரள அரசு அனுமதி மறுத்தது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கவும், பலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததும் 152 அடி வரை நீரை தேக்கவும் அனுமதி அளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப் பகுதிக்கான பேரிடர் மேலாண்மை திட்ட உருவாக்கம் குறித்து கேள்வி எழுப்பும் மனுதாரர் ரசூல் ஜாய், அவரது மனுவில் இது தொடர்பாக கேரள அரசின் நடவடிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மக்களின் பாதுகாப்பு மீது அக்கறை செலுத்துவதும் இரு மாநிலங்களுக்கும் கடமை உள்ளது. 

எனவே, இந்த விவகாரத்தில் வழக்கு தொடரும் உரிமை மனுதாரர் ரசூல் ஜாய்க்கு இல்லை என்பதால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆய்வுகளின் முடிவில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் அதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து தொடந்து அவநம்பிக்கை எழுப்பும் வரையிலான கேள்விகளை எழுப்பி வரும் கேரள அரசானது, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைச் செய்து வருகிறது. 

இது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிரானதாகும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com