
ஆதாரை அமல்படுத்தியதன் மூலமாக கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.90,000 கோடி பணம் சேமிப்பாக கிடைத்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மானியத் திட்டங்களில் போலியான, பொய்யான பயனாளர்களை ஆதார் மூலமாக கண்டறிந்ததால் இந்த சேமிப்பு சாத்தியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரை வைத்து சேமிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போன்ற 3 நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான முகநூலில், அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதாரை அமல்படுத்துவதில் அரை மனதாக இருந்தது. ஆதார் தொடர்பாக அவர்களுக்கு குழப்பங்கள் ஏற்பட்டதும், முடிவெடுக்க முடியாமல் திணறியதுமே அதற்கு காரணம்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் திடமான தலைமையின் கீழ் ஆதார் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.
அரசின் மானியத் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில், போலியான பயனாளர்களை நீக்கியதால் அரசுக்கு கடந்த சில ஆண்டுகளில் தொடங்கி 2018 மார்ச் வரையிலும் ரூ.90,000 கோடி சேமிப்பாகக் கிடைத்தது. ஆதார் மூலமான சேமிப்பு பணத்தில், பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற மாபெரும் மூன்று நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். அந்த அளவுக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது ஆதார்.
ஆதாருக்கான புகழுக்கு உரிமை கோருவதற்குப் பதிலாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர்களாக, ஆதாருக்கு எதிரானவர்களாக தங்களை காட்டிக் கொள்கின்றனர்.
ஆதார் பயன்பாடு காரணமாக இடைத்தரகர்களின் தலையீடு இன்றி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியம் சென்றடைகிறது. இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் இந்தியாவில் மட்டும்தான் செயல்படுத்தப்படுகிறது. ஆதார் மூலமாக சேமிக்கப்படும் பணம் மீண்டும் ஏழைகளின் நலனுக்காக செலவிடப்படுகிறது.
பயனாளர்கள் எண்ணிக்கை: வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு வாங்கும் 22.80 கோடி வாடிக்கையாளர்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட அவர்களது வங்கிக் கணக்குகளில் மானியத் தொகை செலுத்தப்படுகிறது.
நாட்டில் மொத்தம் 58.24 கோடி குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயனாளர்கள் 10.33 கோடி பேருக்கு அவர்களது வங்கிகளில் ஊதியம் செலுத்தப்படுகிறது.
தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியுதவி திட்டங்களில் 1.93 கோடி பயனாளர்கள் பயனடைந்து வருகின்றனர் என்று ஜேட்லியின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.