
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நபர்கள் குறித்து தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, ஒடிஸா விவசாயத் துறை அமைச்சர் பிரதீப் மகாரதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஒடிஸா மாநிலம், பிபிளி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரை விடுவித்து புவனேசுவரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து மகாரதி கருத்து தெரிவித்தபோது, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்; இது உண்மைக்கு கிடைத்த வெற்றி; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்துவிட்டது என்றார். அவரது இந்தக் கருத்து, ஒடிஸாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாரதிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், அமைச்சர் மகாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பாஜக மற்றும் காங்கிரஸ் மகளிர் அணி அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.
இதையடுத்து தனது கருத்துக்காக அமைச்சர் மகாரதி வருத்தம் தெரிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. அவர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதனிடையே, ஒடிஸாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியபோது, இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ஒடிஸா அரசு மீது குற்றம்சாட்டினார். ஒடிஸாவை ஆளும் பிஜு ஜனதா தளம் அரசுக்குப் பெண்கள், சிறுமிகள் நலன் மீது அக்கறை கிடையாதென்று அவர் புகார் தெரிவித்தார். மேலும், பிபிளி பாலியல் மற்றும் கொலை சம்பவம் குறித்து மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஒடிஸா விவசாயத் துறை அமைச்சர் பிரதீப் மகாரதி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து ஒடிஸா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதல்வர் அலுவலகத்துக்கு தனது பதவி விலகல் கடிதத்தை மகாரதி அனுப்பியுள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாரதியின் கருத்தை செய்தியாளர்கள் அறிய முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முன்னதாக, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மகாரதி இதற்கு முன்பும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். இருப்பினும், 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, மகாரதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.