பிரம்மோற்சவத்தின்போது கலைநிகழ்ச்சிகள் நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

காளஹஸ்தி கோயிலில் நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தின்போது கலைநிகழ்ச்சிகள் நடத்த கலைக் குழுக்களிடம் இருந்து
பிரம்மோற்சவத்தின்போது கலைநிகழ்ச்சிகள் நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

காளஹஸ்தி கோயிலில் நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தின்போது கலைநிகழ்ச்சிகள் நடத்த கலைக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வரும் மார்ச் 3ஆம் தேதி மகாசிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 27 முதல் மார்ச் 11ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவமூர்த்திகள் மாடவீதியில் வலம் வர உள்ளனர். கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அதில் கலந்து கொண்டு ஆடல், பாடல், நடனம், சொற்பொழிவு, கதாகாலட்சேபம், இசைக் கச்சேரி, பஜனை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் கலைக்குழுக்கள் வரும் 25ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்துடன் கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் இரு தினங்களுக்கு இலவச முதன்மை தரிசனங்கள்
திருமலையில் வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு தினங்களிலும் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர்கள் ஆகியோருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது.
அதன்படி வரும் 8ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.
அதைத் தொடர்ந்து, 9ஆம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சுபதம் பகுதி வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.82 கோடி
ஏழுமலையான் உண்டியல் வருமானம் சனிக்கிழமை ரூ.2.82 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி சனிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.82 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.36.21 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.25.61 லட்சம், பேர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.36.21 லட்சம் நன்கொடையாகக் கிடைத்தது.






 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com