புரிதல் இல்லாத பேச்சு; பொறுப்பற்றதனம்

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவன (ஹெச்ஏஎல்) விவகாரத்தில், நாட்டுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொய்யான தகவலை அளிப்பதாகவும் அது பொறுப்பற்றதனம் எனவும்
புரிதல் இல்லாத பேச்சு; பொறுப்பற்றதனம்

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவன (ஹெச்ஏஎல்) விவகாரத்தில், நாட்டுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொய்யான தகவலை அளிப்பதாகவும் அது பொறுப்பற்றதனம் எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து சுட்டுரையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 ஹெச்ஏஎல் விவகாரத்தில் நாட்டுக்கு பொய்யான தகவலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ரூ.26,570 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
 மேலும், ரூ.73,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளன. ஆதலால், தனது கருத்துக்காக, மக்களவையில் இருந்தபடி நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுவிட்டதாக நான் தெரிவிக்கவில்லை, அது தொடர்பான பணிகள் நடைமுறையில் உள்ளது என்றே நான் தெரிவித்துள்ளேன். மக்களவை ஆவணங்களில் இருந்து இதை தெரிந்து கொள்ளலாம்.
 காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, "ஏபிசி'-யில் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது. ஆவணங்களில் என்ன இருக்கிறது என்று கூட படித்துப் புரிந்து கொள்ளாமல், அதை சுட்டிக்காட்டி மக்களுக்குப் பொய்யான தகவலை ராகுல் காந்தி அளித்து வருகிறார். இது பொறுப்பற்றதனம் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
 மேலும் அந்தப் பதிவுகளில், மத்தியில் பாஜக கூட்டணி அரசு கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த பட்டியலையும் நிர்மலா சீதாராமன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், "83 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை, இந்திய விமானப்படைக்கு அளிப்பதற்கான ரூ.49,797 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் தொழில்நுட்ப மதிப்பீட்டின் கீழ் உள்ளது. காமோவ் 226டி ஹெலிகாப்டர்களை அளிப்பது தொடர்பான ரூ.20,000 கோடி மதிப்பு ஒப்பந்தமும் அதே நிலையில் உள்ளது' குறிப்பிடப்பட்டுள்ளது.
 முன்னதாக, ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படைக்கு வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, உதிரி பாகங்களை தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை டஸால்ட் தேர்வு செய்தது. இந்தப் பணிக்கு பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏவியேஷன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதை மத்திய பாஜக கூட்டணி அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com