மக்களவைத் தேர்தல்: அறுதிப் பெரும்பான்மைக்கு பாஜகவுக்கு 15 இடங்கள் குறையும்; கருத்துக் கணிப்பில் தகவல்

தற்போதைய நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு

தற்போதைய நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு (272) 15 இடங்கள் குறைவாகத்தான் கிடைக்கும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 257 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
 அதே போன்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (எஸ்பி, பிஎஸ்பி தவிர்த்த) 146 இடங்களைக் கைப்பற்றும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற கட்சிகள் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
 அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இந்தக் கருத்துக் கணிப்பு கடந்த டிசம்பர் 15-25 இடையே நடத்தப்பட்டுள்ளது.
 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரிலும் இதுபோன்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
 அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 281 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) 124 இடங்களிலும், மற்ற கட்சிகள் 138 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
 பாஜக கூட்டணியில் பாஜக மட்டும் 223 இடங்கள், சிவ சேனைக்கு 8, ஐக்கிய ஜனதா தளத்துக்கு 11, பாமகவுக்கு 1, அகாலி தளத்துக்கு 3, என்டிபிபிக்கு 1, ஏஐஎன்ஆர்சி-1, என்பிபி-1, எஸ்டிஎஃப்-1, அப்னா தளம்-1, எம்என்எஃப்-1 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
 காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் 85 இடங்கள் (2014 தேர்தலுடன் ஒப்பிட்டால் இரண்டு மடங்கு), திமுக 21, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்-10, என்சிபி - 9, ஜேஎம்எம்-4, மதச்சார்பற்ற ஜனதா தளம் 4, ராஷ்டிரிய லோக் தளம்-2, ஆர்எல்எஸ்பி -1, ஐயுஎம்எல்-2, தெலுங்கு தேசம் -4, ஜம்மு - காஷ்மீர் தேசிய கட்சி -2 மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) -1 இடங்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
 மற்ற கட்சிகளின் பட்டியலில் உள்ள மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் -26, சமாஜவாதி கட்சி-20, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி-15, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 19, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி -16, பிஜு ஜனதா தளம் 13, அஇஅதிமுக 10, அமமுக -4, இடதுசாரிகள்-8, ஆம் ஆத்மி-2, ஐஏயுடிஎஃப்-2, பிடிபி-1, ஜேவிஎம் (பி)-1 மற்றும் ஏஐஎம்ஐஎம்-1 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com