10% இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்
10% இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கானது

பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதா என்ற பெயரிலான இந்த சட்ட முன்வடிவுக்கு நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா, பிற்பகலில் இருந்து இரவு 10 வரை சுமார் 8 மணி நேரம் நடந்த நீண்ட விவாதத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது. 
பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரித்து 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஏழு பேர் அதை எதிர்த்து வாக்களித்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, இனி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின்னர் சட்டமாக மாறும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்களுக்கு ஏற்கெனவே மொத்தமாக வழங்கப்படும் 50 சதவீத ஒதுக்கீட்டுடன் , பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வழங்கும் வகையில் கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கப்படவுள்ளது.
திமுக தீர்மானம் தோல்வி: முன்னதாக, இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார். இடதுசாரிக் கட்சிகளும் அந்தக் கோரிக்கையை ஆதரித்தன.
இதுதொடர்பாக திமுக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது, 18 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும், 155 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். இதனால், அத்தீர்மானம் தோல்வியடைந்தது.
அதேபோன்று, பிற எதிர்க்கட்சிகள் சார்பில் மசோதா மீது கொண்டு வரப்பட்ட 5 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
மத்திய அரசு வாக்குறுதி: மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. மத்திய சமூகநலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அதற்கு பதில் அளித்துப் பேசுகையில், தற்போது மேற்கொள்ளப்படும் சட்டத்திருத்தத்தால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்தார்.
இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் வகையிலேயே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: முன்னதாக, தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு அவசர கதியில் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 
ஆனால், ஏழைகளின் நலனுக்காகக் கொண்டு வரப்படும் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாக மத்திய அமைச்சர் விஜய் கோயல் குற்றம்சாட்டினார்.
அதற்கு, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மறுப்பு தெரிவித்தன. மசோதாவை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், அது கொண்டு வரப்படும் விதம் குறித்தே ஆட்சேபம் தெரிவிப்பதாகவும் அக்கட்சிகள் விளக்கம் அளித்தன. குறிப்பாக, பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருந்ததாக காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியது.
அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசுகையில், தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தி 
வரும் நிலையில், பொதுப்பிரிவில் உள்ள 31 சதவீத மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மசோதா அமையும் என்று கூறினார். 
மாநிலங்களவை ஒத்திவைப்பு: இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி- பிரதமர் நரேந்திர மோடி​
பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதை சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்குவதற்கு வழி செய்வதாக இந்த இடஒதுக்கீடு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் மோடி புதன்கிழமை இரவு வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க மசோதா வகை செய்துள்ளது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸின் ஆதரவும், ஆட்சேபமும்-
பொதுப்பிரிவினரில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருந்தோம். ஆகவே, மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக இல்லாமல் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய அரசு அவசர கதியில் கொண்டு வருவது ஏன்? வாக்குகளை கவரும் நோக்கத்திலேயே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

வித்திட்டவர் எம்ஜிஆர்!


தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான முயற்சிகளை 1979-ஆம் ஆண்டிலேயே அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் முன்னெடுத்தார். 1981-ஆம் ஆண்டு முதல் புதிய நடைமுறையை அமலாக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், பல்வேறு நெருக்கடிகளால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com