நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இட விவகாரம் தொடர்பான வழக்கில், தில்லி உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் (ஏஜேஎல்) நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தில்லியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாக பத்திரிகை வெளிவராததையடுத்து, அரசு இடத்தைக் காலி செய்யுமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், அந்த இடத்திலிருந்து 2 வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும் கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி உத்தரவிட்டார்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ""பத்திரிகையை வெளியிடுவதற்காக அரசுக்குச் சொந்தமான நிலம் ஏஜேஎல் நிறுவனத்துக்குக் குத்தகை முறையிலேயே வழங்கப்பட்டிருந்தது. பத்திரிகை வெளியாவது கடந்த 2008-ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து, அந்த இடத்தைக் காலி செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்தது. எனவே, ஏஜேஎல் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று வாதிட்டார். ஏஜேஎல் நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, ""நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தித்தாளாக வெளிவருவது மட்டுமே நிறுத்தப்பட்டது. ஆனால், பத்திரிகையின் இணையவழிப் பதிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது'' என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.