ஸ்விஸ் வங்கிகளில் பணம்: இந்தியாவுக்கு 74-ஆவது இடம்

ஸ்விஸ் வங்களில் அதிக அளவில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-ஆவது இடத்தில் உள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் பணம்: இந்தியாவுக்கு 74-ஆவது இடம்

ஸ்விஸ் வங்களில் அதிக அளவில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-ஆவது இடத்தில் உள்ளது.
 இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 ஸ்விஸ் வங்கிகளில் அதிகளவில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 88-ஆவது இடத்தில் இருந்தது. கடந்தாண்டில் 15 இடங்கள் முன்னேறி 73-ஆவது இடத்துக்கு வந்தது. ஆனால், தற்போது இப்பட்டியலில் இந்தியா ஒரு இடம் பின்னடைவைக் கண்டு 74-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
 ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்ட நிதியில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 0.07 சதவீதம் அளவுக்கே உள்ளது.
 அதேசமயம், 2018 இறுதி நிலவரப்படி இப்பட்டியலில் பிரிட்டன் 26 சதவீதத்துக்கும் மேலான பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
 ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்படும் வெளிநாட்டு நிதியில் முதல் ஐந்து இடங்களில் பிரிட்டனைத் தொடர்ந்து, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஸ்விஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ஒட்டுமொத்த வெளிநாட்டு பணத்தில் இந்த ஐந்து நாடுகளின் பங்களிப்பு மட்டும் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது. அதிலும், முதல் 10 கணக்குகளில் மட்டும் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
 ஸ்விஸ் வங்கிகளில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு பணத்தில் முதல் 15 நாடுகளின் பங்களிப்பு சுமார் 75 சதவீதம் அளவுக்கு உள்ளது. முதல் 10 நாடுகளின் பட்டியலில், பஹாமாஸ், ஜெர்மனி, லக்ஸம்பர்க், கேமன் தீவுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் உள்ளன.
 பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஸ்விஸ் வங்கிகளில் அதிகளவிலான பணத்தை டெபாசிட் செய்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா மட்டுமே மிகவும் பின்தங்கியுள்ளது. அதேசமயம், ரஷியா 20 ஆவது இடத்திலும், சீனா 22-ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 60 ஆவது இடத்திலும், பிரேசில் 65-ஆவது இடத்திலும் உள்ளன.
 அதேபோன்று, மோரீஷஸ் (71-ஆவது இடம்), நியூஸிலாந்து (59), பிலிப்பின்ஸ் (54), வெனிசூலா (53), செஷல்ஸ் (52), தாய்லாந்து (39), கனடா (36), துருக்கி (30), இஸ்ரேல் (28), சவூதி அரேபியா (21), பனாமா (18), ஜப்பான் (16), இத்தாலி (15), ஆஸ்திரேலியா (13), ஐக்கிய அரபு அமீரகம் (12), குயெர்ன்சி (11) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவை காட்டிலும் அதிகமாகவே ஸ்விஸ் வங்கிளில் பணத்தை வைத்துள்ளன.
 இருப்பினும், இந்தியாவைச் சுற்றியுள்ள பல அண்டை நாடுகள் இப்பட்டியலில் பின்தங்கியே உள்ளன. அதன்படி, பாகிஸ்தான் 82-ஆவது இடத்திலும், வங்க தேசம் 89-ஆவது இடத்திலும், நேபாளம் 109-ஆவது இடத்திலும், இலங்கை 141 இடத்திலும், மியான்மர் 187-ஆவது இடத்திலும், பூடான் 193-ஆவது இடத்திலும் உள்ளன.
 கடந்த 2018-ஆம் ஆண்டில், ஸ்விஸ் வங்கிகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் செலுத்திய மொத்த தொகை 4 சதவீதம் சரிவடைந்து ரூ.99 லட்சம் கோடியானது. இதில், இந்திய வாடிக்கையாளர்கள் வைத்துள்ள தொகை 6 சதவீதம் குறைந்து ரூ.6,757 கோடியாகி உள்ளது. இது, கடந்த 20 ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும் என்று அந்தப் புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com