
மேற்கு வங்கத்தில் பாஜகவில் ஒரு கோடி பேரை சேர்க்க அந்த மாநில பாஜக திட்டமிட்டுள்ளது. இப்போது அக்கட்சியில் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
ஜூலை 6-ஆம் தேதி தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கையை பாஜக தொடங்குகிறது. வாராணசி பிரதமர் மோடி இதனைத் தொடங்குகிறார். இதேபோல அனைத்து மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பாஜக தலைவர்கள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையைத் தொடங்கி வைக்கின்றனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:
பாஜக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் 18 இடங்களை பாஜக வென்றது. இதன் மூலம் பாஜக மக்களின் ஆதரவை எந்த அளவுக்கு பெற்றுள்ளது என்பது தெரியவந்தது. தேர்தலில் பாஜகவுக்கு 2.3 கோடிக்கு மேல் வாக்குகள் கிடைத்தன.
இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இப்போது மாநிலத்தில் பாஜகவில் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் மாநிலத்தில் பாஜகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஒரு மாதத்தில் இந்த இலக்கை எட்டுவோம். 2021-ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக அமோக வெற்றி பெறுவதற்கு இந்த உறுப்பினர் சேர்க்கை பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றார் அவர்.