
மகாராஷ்டிர மாநிலம், பல்கார் மாவட்டத்தின் நாலாசோபாரா பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து வெள்ளத்தால் சூழப்பட்ட முக்கிய சாலை.
தொடர் மழை காரணமாக, மகாராஷ்டிர மாநிலம், மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது உள்பட பல்வேறு சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை நீடித்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக கன மழை நீடித்தது. மும்பை புறநகரான மாலாட் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில், 21 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயமடைந்தனர். அவர்கள் மாநகராட்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே மாலாட் பகுதியில் ஒரு கார் வெள்ளத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
முலுந்த் பகுதியில் சுவர் இடிந்து பாதுகாவலர் ஒருவரும், விலே பார்லே பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவரும் உயிரிழந்தனர்.
புணே நகரின் அம்பேகான் பகுதியில் திங்கள்கிழமை இரவு சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். தாணே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். புல்தானா மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
203 விமானங்கள் ரத்து: மோசமான வானிலை காரணமாக மும்பை விமான நிலையத்தில் 203 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்திலிருந்து விலகியது. இருப்பினும், விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் காயமடையவில்லை.
தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால், மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த ரயில்களில் சிக்கித் தவித்த பயணிகளை ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராந்தி நகர், குர்லா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
மழை நீடிக்கும்: மும்பையில் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 1974-ஆம் ஆண்டுக்கு பிறகு, மும்பையில் மிக அதிக மழைப் பொழிவு இருந்தது இந்த ஆண்டுதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் அவசர ஆலோசனை:
இதனிடையே, மும்பையில் மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அவசர ஆலோசனை நடத்தினார். ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு தொடர்பான விவரங்களை அவர் கேட்டறிந்தார். அடுத்த இரு நாள்களுக்கு தீவிர கண்காணிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.