
மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது பொருளாதார விவகாரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
நாட்டில் உற்பத்தித் துறையில் சிறிதளவு சுணக்கம் ஏற்பட்டது உண்மைதான். இதற்கும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2018-19 நிதியாண்டில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகள், வர்த்தகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நிதி, மனை வணிகம் மற்றும் கட்டுமானத் துறை உள்ளிட்டவற்றில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி சிறிது பாதிக்கப்பட்டது. இதற்கும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்தியா இப்போதும் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவே உள்ளது. தொழில் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 5 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 7 முதல் 7.3 சதவீதமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளில் 1.6 சதவீதம் முதல் 2.3 சதவீதமாகவே பொருளாதார வளர்ச்சி உள்ளது. இதுவே சீனாவில் 6.3 சதவீதம் முதல் 6.7 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி உள்ளது.
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், மக்களின் கைகளில் பணம் அதிக அளவில் சென்று சேரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகள் வருவாய் உதவித் திட்டம், பிரதமர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவை இதற்காகவே செயல்படுத்தப்படுகின்றன. தொழில், வர்த்தக மேம்பாட்டுக்காக தொடர்ந்து அதிக அளவில் கடன்கள் கொடுக்கப்படுகின்றன.
2006-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின்போது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் பல நன்மைகள் கிடைத்தன. முக்கியமாக பயங்கரவாதத்துக்கு நிதி செல்வது தடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், செல்லாக்காசாகியது. நாட்டில் புழக்கத்தில் இருந்து கள்ள நோட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டன.
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்காக மத்திய அரசு புதிய முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தாராளமயமாக்கல், அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்ந்து நமது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்றார் நிர்மலா சீதாராமன்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையிலும்அவர் எடுத்துரைத்தார்.