பூஜ்ஜியத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ் தான்: பிரணாப் முகர்ஜி

பூஜ்ஜியத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ் தான்: பிரணாப் முகர்ஜி

நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாஜக தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்த பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இந்நிலையில், புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி பேசுகையில்,

நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உயர்வு திடீரென வானத்தில் இருந்து குதித்து ஏற்பட்டுவிடப்போவதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வலிமையான அடிக்கல் பிரிட்டீஷ்காரர்களால் அல்லாமல் சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியால் நாட்டப்பட்டது. 

முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஏற்படுத்திய ஐஐடி, இஸ்ரோ, ஐஐஎம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட சேவைகளின் காரணத்தால் தான் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய உச்சத்தை எட்ட முக்கிய காரணமாக அமைந்தது. பின்னாளில் நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சியின் கீழ் தாளாரமயமாக்கல் ஏற்படுத்தப்பட்டு பொருளாதாரம் விரிவடைந்தது. 

கடந்த கால காங்கிரஸ் அரசை குறை கூறுவதற்கு முன், சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் வளர்ச்சி 55 ஆண்டுகால காங்கிரஸ் அரசால் ஏற்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் பூஜ்ஜியத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை தற்போதுள்ள 1.8 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியது காங்கிரஸ் அரசு தான். அதுதான் நாட்டின் பொருளாதாரம் வலிமையடைய முக்கிய காரணமாகும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com