அயோத்தி வழக்கு: மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

அயோத்தியில் ராமஜென்மபூமி - பாபர் மசூதி நில விவகாரத்தில் மத்தியஸ்தர் குழுவின் நடவடிக்கைகள் தொடர உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது. 
அயோத்தி வழக்கு: மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

புது தில்லி: அயோத்தியில் ராமஜென்மபூமி - பாபர் மசூதி நில விவகாரத்தில் மத்தியஸ்தர் குழுவின் நடவடிக்கைகள் தொடர உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது. 

அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஏற்கெனவே கடந்த மே மாதம் தங்கள் இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மத்தியஸ்த குழுவுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சம்பந்தப்பட்டவர்களுடன் இக்குழு 8 வாரங்களில் பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரரான கோபால் சிங் விஷாரத் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ். நரசிம்மா, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மத்தியஸ்தர்களை நியமித்த பிறகும் அயோத்தி நில விவகார வழக்கில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மனுவை விசாரணைக்கு ஏற்றது.

இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கலிஃபுல்லா தலைமையிலான குழுவுக்கு, மத்தியஸ்தம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை ஜூலை 18ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மத்தியஸ்த நடவடிக்கையை முடித்துக் கொள்வதென முடிவெடுக்கும்பட்சத்தில், ஜூலை 25ஆம் தேதி முதல் அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு மீது  நாள்தோறும் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

அறிக்கை தாக்கல்: இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர்கள் குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம், ஏற்கெனவே கூறியபடி இந்த அறிக்கையை ரகசியமாக வைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தது. மேலும், மத்திஸ்தர் குழு இந்த விவகாரத்தில் தனது பணிகளைத் தொடரலாம். நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அடுத்த அறிக்கையை மத்திஸ்த குழு அளிக்க வேண்டும். அதன் பிறகு தேவை ஏற்பட்டால் ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த விவகாரத்தை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

முன்னதாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய தரப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை நடைபெற்றது. அப்போது, "இது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. நிலம் தொடர்பான பிரச்னை என்றால், எளிதில் தீர்ப்பு வழங்கிவிடலாம். ஆனால், ஹிந்து-முஸ்லிம் மதத்தினரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக மத்தியஸ்தரை நியமனம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க உள்ளோம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, கடந்த மார்ச் மாதம் மத்தியஸ்தர் குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மத்தியஸ்தர் குழு கடந்த மே மாதம் தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மத்தியஸ்தர் குழுவுக்கு கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com