
அடூர் கோபாலகிருஷ்ணன்
புகழ்பெற்ற மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இந்தியாவில் அதிகரிக்கும் மதம் சார்ந்த கும்பல் கொலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநர்கள் அடூர் பாலகிருஷ்ணன், மணிரத்னம், அபர்ணா சென், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த கடிதத்தில் மலையாள இயக்குநர் அடூர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டதற்கு எதிராக கேரளாவில் பாஜக தலைவர்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன், "அடூர் பாலகிருஷ்ணன் மதிப்புக்குரிய இயக்குநர்தான். ஆனால், நாட்டின் கலாச்சாரத்தை இழிவுபடுத்தக் கூடாது. ஜெய் ஸ்ரீராம்' முழக்கத்தைக் கேட்க முடியாவிட்டால் நிலவுக்குச் செல்லுங்கள்" என்று தெரிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு பாஜக தரப்பில் ஆதரவுகள் எழுந்தன.
ஆனால், அதேசமயம் மற்ற தரப்பில் இருந்து இதற்கு கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. கேரள முதல்வர் பினராயி விஜயன் அடூர் கோபாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இதன்பிறகு பேட்டியளித்த பினராயி விஜயன்,
"இதுபோன்ற கருத்துகளுக்கு பாஜக தலைமையில் இருந்தும் ஆதரவுகள் கிளம்புகின்றன. இது நாட்டின் பிற பகுதிகளில் நடைபெறுகிறது. ஆனால், இந்த திட்டம் கேரளாவில் செல்லுபடியாகாது என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கேரள மக்கள் ஒன்றிணைந்து, அடூர் பாலகிருஷ்ணனுக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தோம். அதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அவருக்கான அனைத்து ஆதரவுகளையும் நான் உறுதிபடுத்துகிறேன்" என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அடூர் பாலகிருஷ்ணனை நேரில் சென்று சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...