ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம்: பிடி இறுகுகிறது

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்துள்ளவர்களை கண்டறிவது தொடர்பான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஸ்விட்சர்லாந்து சார்பில் இந்தியர்களுக்கு
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம்: பிடி இறுகுகிறது

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்துள்ளவர்களை கண்டறிவது தொடர்பான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஸ்விட்சர்லாந்து சார்பில் இந்தியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த பொட்லுரி ராஜாமோகன் ராவ் என்பவருக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 முன்னதாக, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 14 இந்தியர்களுக்கு இதுபோன்று கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது தொழிலதிபரான பொட்லுரி ராஜாமோகன் ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
 இந்தியாவின் தென் மாநிலங்களில், தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பொட்லுரி ராஜாமோகன் ராவுக்கு கடந்த மே 28-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 ஸ்விட்சர்லாந்து அரசின் வரி நிர்வாகப் பிரிவு அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில் பொட்லுரி ராஜாமோகன் ராவின் பிறந்த தினம் (1951 ஜூலை 15), அவர் இந்தியாவில் தங்கியுள்ள முகவரி தவிர வேறு எந்தத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
 அவரது ஸ்விஸ் வங்கிக் கணக்கு தொடர்பாக இந்திய அதிகாரிகள் கோரியுள்ள நிர்வாக ரீதியிலான உதவிகளுக்கு எதிராக பொட்லுரி மேல்முறையீடு செய்ய விரும்பினால், 10 நாள்களுக்குள் அதைச் செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
 ஸ்விஸ் வங்கிகளின் கணக்குகளில் கருப்புப் பணம் வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் பல இந்தியர்கள் தொடர்பான தகவல்களை இந்தியா கோரியுள்ளது. எனவே, அடுத்து வரும் வாரங்களிலும் இதுபோன்ற நோட்டீஸ்கள் இந்தியர்கள் பலருக்கு அனுப்பப்படலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
 வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த செல்வந்தர்கள் சிலர் தங்களது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
 அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்விஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கடந்த மாதம் 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அதில் 21-ஆம் தேதி மட்டும் 11 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
 எனினும், இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்ட அறிவிக்கையில், கணக்கு வைத்திருப்போர் பெயரின் முதல் எழுத்து, பிறந்த தேதி, எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆகிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன.
 கிருஷ்ண பகவான் ராம்சந்த், கல்பேஷ் ஹர்ஷத் கினாரிவாலா, ரத்தன் சிங் செளதரி, குல்தீப் சிங் திங்ரா, அனில் பரத்வாஜ் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் மட்டும் முழுமையாக இடம்பெற்றுள்ளன. எனினும், அவர்கள் தொடர்பான வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
 இந்திய அரசுக்கு தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிப்பதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட இந்திய வாடிக்கையாளர்கள் உரிய ஆதாரங்களுடன் 30 நாள்களுக்குள் (சிலவற்றில் 10 நாள்களுக்குள்) முறையீடு செய்யலாம். அவர்கள் முறையீடு செய்யத் தவறினால், அவர்களைப் பற்றிய வங்கிக் கணக்கு விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஸ்விஸ் அரசு முன்னெடுக்கும்.
 முன்னதாக, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மும்பையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஜியோடெசிக் நிறுவனம் மற்றும் அதன் 3 இயக்குநர்களான பிரசாந்த் சரத் முலேகர், பங்கஜ் குமார் ஓங்கர், கிரண் குல்கர்னி ஆகியோருக்கும், சென்னையைச் சேர்ந்த ஆதி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்துக்கும் ஸ்விட்சர்லாந்து அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது அந்த இரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
 இந்தியா மட்டுமல்லாமல், ஸ்விஸ் வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ள இதர நாட்டவர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கைகளை ஸ்விட்சர்லாந்து அரசு முன்னெடுத்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com