
"கடந்த சில ஆண்டுகளாக அரசியல் மாண்பு குறைந்து வருவது கவலை அளிக்கிறது. விரைவாக அதை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் ஹைதராபாத் மேலாண்மைச் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நம்பத் தகுந்த எதிர்க்கட்சி என்பது, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு முக்கியத் தேவையாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரை எதிர் தரப்பினராக பார்க்க வேண்டுமே தவிர, தங்கள் எதிரிகளாக பார்க்கக் கூடாது.
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் மாண்பு குறைந்து வருவது கவலையளிக்கிறது. அதை முடிந்த வரையில் விரைவாக மீட்டெடுக்க வேண்டும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒரு வாக்கியத்தை நான் அடிக்கடி குறிப்பிடுவேன். "கலந்தாலோசித்து, விவாதித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், தொந்தரவு தருபவர்களாக இருக்கக் கூடாது' என்பதே அந்த வாக்கியமாகும். நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் அடிக்கடி இடையூறுகள் ஏற்படுவதும் வருத்தமளிக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்களின் நோக்கத்துக்கு மாறாக, அமளிகளுக்கான ஒரு களமாக சட்டப்பேரவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்திய அரசமைப்புக்கு செய்யப்படும் அவமரியாதையாகும். மேலும், ஜனநாயகத்தின் தூண்கள் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கைக்கு செய்யும் துரோகமாகும்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறிய வழக்குகளில் விரைவாக முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல், அரசியல் தலைவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், தேர்தல் தொடர்பான வழக்குகளிலும் உயர்நீதிமன்றங்களின் சிறப்பு அமர்வுகள் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்கள் முடிவைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். நிலையான, தொடர்ச்சியான அரசு அமைய அவர்கள் வாக்களித்தனர் என்று வெங்கய்ய நாயுடு பேசினார்.