
ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டது.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட 25 அமைச்சர்களுக்கும் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற அமைச்சர்களில் 5 பேரை துணை முதல்வராக நியமித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பமுலா புஷ்ப ஸ்ரீவாணி (எஸ்டி), பில்லி சுபாஷ் சந்திர போஸ் (பிசி), அலா காலி கிருஷ்ணா சீனிவாஸ் என்ற நானி (காபு), கே. நாராயண சாமி (எஸ்சி) மற்றும் அம்ஸத் பாஷா (முஸ்லிம்) ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சந்திர போஸ், ஜெகனின் தந்தை மறைந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர். அவருக்கு, மிக முக்கிய வருவாய் துறை அளிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பபட்ட நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.
ஆந்திரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பின்தங்கிய வகுப்பிலிருந்து 7 பேருக்கும், பட்டியல் இனப்பிரிவிருந்து ஐந்து பேருக்கும், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் பிரிவில் தலா ஒருவருக்கும், காபு மற்றும் ரெட்டி சமுதாயத்திலிருந்து தலா நான்கு பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார்.
தற்போது அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், மேற்கண்ட சமுதாயங்களைச் சேர்ந்த 22 பேருக்கு அமைச்சர் பதவியை ஜெகன் வழங்கியுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர் பதவி வகித்த கம்ம சமூகத்தவருக்கு, தற்போதைய ஜெகன் அமைச்சரவையில் ஒரு இடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஷத்ரிய மற்றும் வைசிய சமுதாயங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர அமைச்சரவையில் முதல்வர் உள்பட 26 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். பட்டியல் இனத்திலிருந்து இரண்டு பெண்கள், பழங்குடியினர் பிரிவிருந்து ஒரு பெண் என மூன்று பேருக்கு ஜெகன் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 இடங்களில் 151 இடங்களை கைப்பற்றி, ஜெகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
முதல்வராக, கடந்த மே 30-இல் அவர் பதவியேற்றார்.