மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்: அமைச்சர் தகவல்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.
 மகாராஷ்டிரத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நாசிக் மாவட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளராக உள்ள கிரீஷ் மகாஜன், ஜல்கான் மாவட்ட பொறுப்பாளராகவும் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பையில் கிரீஷ் மகாஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர்; சிலர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர்; மேலும் சிலர் மூன்றாம் நபர் மூலம் தூது அனுப்பினர்.
 மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாணுடன் உள்ளவர்கள் சிலரே எந்நேரத்திலும் பாஜகவுக்கு அணி தாவக் கூடும். இது அவருக்கே தெரியாது.
 பாஜகவுக்கு அணிதாவ விரும்பும் அனைவரும் அவர்களாகவே எங்களைத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
 மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அவர்களைத் தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.
 மாநில அரசியல் சூழல் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது. வரும் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றாது. அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள வரும் 17-ஆம் தேதிக்குள் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம்.
 மாநில பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முதல்வர் ஃபட்னவீஸ், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com