மோடியின் தேர்தல் பிரசாரங்களில் பொய்கள் மட்டுமே இருந்தன: ராகுல் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில், பொய்கள், விஷத்தன்மை வாய்ந்த வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மட்டுமே இருந்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்
மோடியின் தேர்தல் பிரசாரங்களில் பொய்கள் மட்டுமே இருந்தன: ராகுல் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில், பொய்கள், விஷத்தன்மை வாய்ந்த வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மட்டுமே இருந்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 தனது மக்களவைத் தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 வயநாட்டின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தி சனிக்கிழமை பேரணியாகச் சென்றார். அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி கூறியதாவது:
 மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில் பொய்களைக் கூறியும், மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வார்த்தைகளைக் கூறியும் மோடி வெற்றி பெற்றுவிட்டார்.
 மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் விஷத்தன்மை நிறைந்த பிரசாரங்களை அவர் மேற்கொண்டார். இவற்றையே அவர் தொடர்ந்து தனது ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார். இவை அனைத்தையும் எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
 மோடியிடம் நிறைய பணம் இருக்கலாம்; பணக்கார நண்பர்களின் சகவாசம் இருக்கலாம்; ஊடகங்கள் அனைத்தையும் தனக்குச் சாதகமாக அவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 ஆனால், பாஜக உருவாக்கி வரும் சகிப்பின்மைக்கு எதிராக காங்கிரஸ் போராடும். காங்கிரஸ் கட்சியானது உண்மையையும், அன்பையும் மட்டுமே தேர்தல் பிரசாரங்களில் வெளிப்படுத்தியது.
 என்னுடைய வேலை வயநாட்டுக்குத் தேவையான அனைத்தையும் செய்து தருவதே. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எனக்கு வாக்களித்துள்ளனர். வயநாட்டில் பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. அவை அனைத்துக்கும் நாம் ஒன்றுசேர்ந்து தீர்வு காண்போம் என்றார் ராகுல் காந்தி.
 இந்தப் பேரணியில் கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 மக்களிடம் குறைகேட்பு: முன்னதாக, வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்துக்குச் சென்ற ராகுல், அங்கு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் அளித்த மனுக்களையும் ராகுல் பெற்றுக்கொண்டார்.
 வயநாடு மாவட்ட அதிகாரிகள், காங்கிரஸ் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ராகுல் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், தொகுதியில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் குறித்து ராகுலிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என ராகுல் உறுதியளித்தார்.
 தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ராகுல் தில்லி திரும்புகிறார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com