
மருத்துவர்கள் விவகாரத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்மானப் பிரச்னையாகக் கருதக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார். எஸ்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூட்டமைப்பு உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது:
மருத்துவர்கள் பாதுகாப்பில் மத்திய அரசு நிச்சயம் கவனம் செலுத்தும் என்று உறுதியளிக்கிறேன். எனவே மருத்துவர்கள் அனைவரும் தங்கள் தரப்பு கோரிக்கையை பணிக்கு இடையூறு இல்லாத வகையில் நூதனப் போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தாலம். அனைத்து மருத்துவர்களும் தயவு செய்து மீண்டும் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை வைக்கிறேன்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் இதை பொதுப் பிரச்னையாக கருத வேண்டுமே தவிற தன்மானப் பிரச்னையாக கருதக் கூடாது. இதுதொடர்பாக நான் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதவுள்ளேன். மேலும் நேரிலும் தொடர்பு கொண்டு ஆலோசிக்க திட்டமிட்டுள்ளேன்.
பிகார் குழந்தைகளின் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக பிகார் சுகாதாரத்துறை அமைச்சருடன் பேசியுள்ளேன். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு தரப்பில் மருத்துவக் குழு அம்மாநில மருத்துவமனைகளில் ஆய்வு செய்யும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.