நீட் தேர்வு முடிவுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி மனு: நீட் விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீட் தேர்வு முடிவுகளை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.
நீட் தேர்வு முடிவுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி மனு: நீட் விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு


நீட் தேர்வு முடிவுகளை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 4 மாணவர்களும் தங்களது மனுக்களை திரும்பப் பெற அனுமதித்து, உயர் நீதிமன்றத்தை நாடும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் பொது நுழைவுத் தேர்வுக்கான விடைத்தாள் குறிப்புகளில் தவறான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளதால், அந்தத் தேர்வு முடிவுகளை செல்லாது என்று அறிவிக்கக் கோரி மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, விடுமுறை கால அமர்வு இன்று விசாரித்தது.

ஹைதராபாதைச் சேர்ந்த 4 மாணவர்கள் சார்பில் மஃபூஸ் மஸ்கி என்ற வழக்குரைஞர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, 
மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான நாடு தழுவிய பொது நுழைவுத்தேர்வு (நீட்), கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைக்குறிப்புகளை தேசியத் தேர்வு மையம் (என்டிஏ) கடந்த மே 29-ஆம் தேதி வெளியிட்டது.

அதில், 5 வினாக்களுக்கான விடைகள் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுகுறித்து தேசியத் தேர்வு மையத்துக்கு மறுநாள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருத்தப்பட்ட விடைத்தாள் குறிப்புகள், ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த விடைத்தாள் குறிப்புகளில்,  தவறான விடைகளுக்கு மாற்றாக சரியான விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், ஏற்கெனவே சரியான விடை அளிக்கப்பட்டிருந்த சில வினாக்களுக்கு தவறான விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களை தேசிய தேர்வு மையம் ஏற்கவில்லை.

நீட் தேர்வு நடத்தியதில், முற்றிலும் சட்ட விரோதமான முறையிலும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மீறும் வகையிலும் தேசியத் தேர்வுகள் மையம் செயல்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்த நீட் தேர்வினை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com