
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும், பாதுகாப்பு ரீதியிலான நடவடிக்கைகள் ஒன்றும் விளையாட்டு அல்ல என்றும் மத்திய அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாலாகோட் பகுதியில் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 250 பேர் உயிரிழந்ததாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்தார். அவருக்கு எவ்வாறு எண்ணிக்கை குறித்து தெரியும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. அதையடுத்து பாலாகோட் பகுதியில் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் உயிரிழந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவதாக கூறிய கபில் சிபல், பிரதமர் நரேந்திர மோடி அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கலந்து கொண்டார். அப்போது, பாலாகோட் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அமித் ஷா தெரிவித்தது அனுமானத்தின் அடிப்படையில்தான். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இத்தனை பேர் இருந்திருக்கலாம் என்று உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர் தெரிவித்திருப்பார். எண்ணிக்கை குறித்து சரியாக தெரிய வேண்டும் என்றால், நேரடியாக அங்கு சென்று எண்ணி பார்த்தால்தான் உண்டு. இது ஒன்றும் கோலிக்குண்டு விளையாட்டு அல்ல. பாதுகாப்பு ரீதியிலான நடவடிக்கை. அதற்கு எவ்வித ஆதாரமும் அளிக்க முடியாது. கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஆதாரமும் தரப்படவில்லை. முதல்முறையாக ஒரு நாட்டின் பகுதிக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரை இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த செயல் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாகக் காட்டுகிறது என்று கூறினார்.
புல்வாமா தாக்குதலை விபத்து என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் கூறியது குறித்த கேள்விக்கு, " முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது பயங்கரவாத தாக்குதலிலா? அல்லது விபத்திலா? என்று அவரிடம் கேட்கிறேன்' என்றார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒவ்வொரு விமானப் புறப்பாட்டின் அறிவிப்புக்கு பின்னரும், அதன் பணியாளர்கள் ஜெய்ஹிந்த் என்று கூற வேண்டும் என்று அந்த நிறுவனம் அறிவித்தது. அதை, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைவருக்கும் தேசப்பற்று அதிகரித்து விட்டது என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி விமர்சித்திருந்தார். அது குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே. சிங், "அவர் கூறுவதை நம்பவும் கூடாது. பெரிதாக எடுத்துக் கொள்ளவும் கூடாது. புல்வாமா தாக்குதல் மற்றும் பாலாகோட் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா ஒற்றுமையாக இருந்தது. தேர்தல் நெருங்குவதால் சிலர் மட்டும் அதில் இருந்து விலகி செல்கின்றனர்' என்றார்.