
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சி இணைந்துள்ளது. அக்கட்சிக்கு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மதுரா, பாக்பட், முஃசாபர்நகர் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனை, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்எல்டி தலைவரும், அக்கட்சியின் நிறுவனர் அஜித் சிங்கின் மகனுமான ஜெயந்த் செளதரி ஆகியோர் லக்னெளவில் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்தனர். அப்போது, அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி - பகுஜன் சமாஜ் இணைந்து அமைத்துள்ள மகா கூட்டணியில் ஆர்எல்டி கட்சி இணைந்துள்ளது. அவர்களுக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம். எங்கள் கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை முழுமையாக தோற்கடிக்கும். உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்' என்றார்.
அப்போது, காங்கிரஸ் கட்சி உத்தரப் பிரதேசத்தில் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "காங்கிரஸ் கட்சி எங்கள் கூட்டணியில்தான் உள்ளது. அவர்களுக்கு அமேதி, ரே பரேலி தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம்' என்றார். "சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் ராகுல் காந்தியின் அமேதி, சோனியா காந்தியின் ரே பரேலி தொகுதியில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். அங்கு காங்கிரஸூக்கு ஆதரவு' என்று ஏற்கெனவே அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.