
பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அனைத்து தாக்குதல் உபாயங்கள் குறித்தும் பரிசீலிப்போம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு கடந்த மாதம் 14-ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படையினர் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் முகாமில் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் விமானப்படையினரும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர். ஆனால் அவர்களின் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதில் எஃப் 16 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கான ஆதாரங்களையும் இந்திய அதிகாரிகள் வெளியிட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
எஃப் 16 போர் விமானங்களைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தியது குறித்து அமெரிக்காவிடம் இந்தியா ஆதாரம் அளித்துள்ளது. அந்நாட்டு அதிகாரிகள் இதை ஆய்வு செய்வார்கள் என நம்புகிறோம். பாலாகோட் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பயங்கரவாத விவகாரத்தில் அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொரு நாடாகச் சென்று மத்தியஸ்தம் செய்ய முன்வரும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து வருகிறது.
ஆனால், "இது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை அல்ல; பயங்கரவாத பிரச்னை' என்று உலக நாடுகளிடம் இந்தியா எடுத்துரைத்துள்ளது. அதனை அனைத்து நாடுகளும் புரிந்துகொண்டுள்ளன.
பாலாகோட் தாக்குதல் சம்பவத்தையடுத்து, மேற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து தளங்களையும் இந்திய விமானப்படை உஷார் நிலையில் வைத்துள்ளது என்று குறிப்பிட்டனர்.