
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஆதரவளிக்கக் கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள சீனா உள்பட 15 நாடுகளையும் இந்தியா அணுகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தை குறிவைத்து, தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நிகழ்த்தினார். 40 வீரர்களின் உயிரை பலிகொண்ட இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்காக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் ஒரு முன்மொழிவை கொண்டு வந்தன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள சீனா உள்பட 15 நாடுகளையும் (5 நிரந்தர உறுப்பினர்கள், 10 தற்காலிக உறுப்பினர்கள்) இந்தியா அணுகியுள்ளது; மசூத் அஸாருக்கு ஐ.நா. மூலம் தடை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா தீவிரமாக முன்னெடுத்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.