
ராணுவத்தின் வலிமை மீது காங்கிரஸ் வீணாக சந்தேகம் எழுப்பி வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதலை பாஜக தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் திங்கள்கிழமை குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இந்தத் தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்தான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி ஏன் வெளியிடவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், ஆர்.பி.என். சிங்குக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரகாஷ் ஜாவடேகர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு என்ன ஆகிவிட்டது என்று எனக்குத் தெரியவில்லை. நாட்டின் நம்பிக்கைக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ராணுவத்தின் வலிமை மீது அவர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுபோன்று எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் நடைபெற்றதில்லை. காங்கிரஸ் மட்டுமே இத்தகைய செயல்களைச் செய்துவருகிறது. ராணுவத்தின் மீது அந்தந்த நாட்டினர் நம்பிக்கை வைப்பது அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், கடந்த மாதம் 14-ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்த்திய தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இதுபோன்ற பல்வேறு தாக்குதல்களை அந்தப் பயங்கரவாத அமைப்பு நாட்டில் நிகழ்த்த இருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த மாதம் 26-ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள், பாலாகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது தொடர்பான ஆதாரங்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால் இத்தாக்குதல் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன.