

கேமராவுக்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்கிறார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் அண்மையில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். மேலும், துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை சுத்தம் செய்து அவர் சேவை செய்தார். இதை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து முகநூல் (பேஸ்புக்) சமூகவலைதள பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கேமராவுக்காக மோடி வாழ்கிறார். கேமராக்கள் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டால், துப்புரவு தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து கூட அவரால் கேட்க முடியாது.
அதை ஒரு நிகழ்ச்சியாக்கி விட்டு, அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோடி சென்று விட்டார்.
துப்புரவு தொழிலாளர்களும், தங்களது வழக்கமான தூய்மை பணிக்கு சென்று விட்டனர் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை சுத்தம் செய்து மோடி சேவை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதனிடையே, சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவுகளில், பழங்குடியினருக்கு பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகள் அளித்தது, அவர்களை வீதிக்கு வரும்நிலைக்கு தள்ளிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார். அவர் அந்த பதிவில், "நமது பழங்குடியின மற்றும் தலித் சகோதர, சகோதரிகள் பிரச்னையில் இருக்கின்றனர். பிரதமரின் பொய்யான வாக்குறுதிகள், அவர்களை வீதிக்கு வரும்நிலைக்கு தள்ளி விட்டது. வனத்தில் வாழ்வதற்கான அவர்களின் உரிமைகள் மீதும், வாழ்க்கையின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பழங்குடியினருக்கு ஆதரவாக நான் இருப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். சுட்டுரையில் ஹிந்தி மொழியில் ராகுல் காந்தி பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.