யார் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்களோ அவர்களைப் பற்றியாவது சிந்தியுங்கள்: மோடிக்கு ராகுல் அறிவுரை

பிரதமர் மோடியின் 'நானும் காவலன்தான்' பிரசாரத்தை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யார் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்களோ அவர்களைப் பற்றியாவது சிந்தியுங்கள்: மோடிக்கு ராகுல் அறிவுரை


புது தில்லி: பிரதமர் மோடியின் 'நானும் காவலன்தான்' பிரசாரத்தை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில் நானும் காவலன்தான் என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

இது குறித்து ராகுல் கூறியிருப்பதாவது, யார் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்களோ குறைந்தபட்சம் அவர்களையாவது நினைத்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

ஜார்கண்டில் குறைந்த ஊதியத்தைக் கண்டிது பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு மற்றும் அலுவலகங்களில் காவல் பணியாற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்துவிட்டு, நானும் காவலன்தான் எனும் கோஷத்தை மோடி எழுப்பி வருவதகாவும் ராகுல் காட்டமாகக் கூறியுள்ளார்.

2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் மக்களின் பணத்தையும், நம்பிக்கையும் பாதுகாக்கும் பாதுகாவலனாக செயல்படுவேன் என்று நரேந்திர மோடி முன்மொழிந்தார். அதன்பிறகு, அவர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரும் ஆனார். அதனால், தேசத்தின் பாதுகாவலன் என்ற வாசகம் அவரது வெற்றி வாசகமாக தோற்றம் கொண்டது.  

ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இதன்மூலம், 'தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்' என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. இதன்மூலம், பாதுகாவலர் என்று பிரதமர் மோடி முன்மொழிந்த சொல் விமரிசனமாக மாறியது.  

இதையடுத்து, அதே பாதுகாவலர் என்ற சொல்லை நேர்மறையாக மாற்றும் வகையில் பிரதமர் மோடி கடந்த 16-ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோ இணைப்புடன் பதிவிடுகையில், 

"உங்களுடைய பாதுகாவலன் உறுதியாக நின்று நாட்டுக்கே சேவையாற்றி வருகிறேன். ஆனால், நான் தனி நபர் அல்ல. ஊழலுக்கு எதிராகவும், சமூகத்தில் நிலவும் தீய செயல்களுக்கு எதிராகவும் போராடும் அனைவருமே பாதுகாவலர் தான். நாட்டின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் அனைவருமே பாதுகாவலர் தான். இன்று, அனைத்து இந்தியர்களும் 'நானும் தேசத்தின் பாதுகாவலன் தான்' என்று சொல்கின்றனர்" என்றார். 

மேலும், இந்த பதிவின் முடிவில், நானும் தேசத்தின் பாதுகாவலன் தான் என்ற உறுதிமொழியை ஏற்று ஹேஷ்டேக்கை டிவீட் செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன்மூலம், "நானும் தேசத்தின் பாதுகாவலனே" என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆனது. 

தேசத்தின் பாதுகாவலன் என்று வாசகத்துக்கு பதிலடி வந்ததை அடுத்து தற்போது நாட்டு மக்கள் அனைவரையுமே பாதுகாவலர் என்ற வட்டத்துக்குள் இழுத்து பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கினார்.  

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் டிவிட்டர் கணக்கில் தங்களது பெயருக்கு முன்னதாக பாதுகாவலன் என்பதை இணைத்தனர். இதனால், பாதுகாவலன் என்ற சொல் பாஜகவுக்கு மீண்டும் நேர்மறையாக மாறத் தொடங்கியது. 

எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், "ரஃபேல் விஷயத்தில் தான் மாட்டிக்கொண்டதும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாவலர் ஆக்கிவிட்டார் பிரதமர் மோடி" என்று அதை மீண்டும் விமரிசித்திருந்தார்.

டிவிட்டரில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த நானும் பாதுகாவலன் தான் என்ற ஹேஷ்டேக் பிரசாரத்துக்கு சுமார் 20 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்து அவர்களது டிவிட்டர் கணக்கில் அந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 90 கோடி வாக்காளர்களுக்கு வாக்குரிமை உள்ளது. இந்த 90 கோடியோடு ஒப்பிடும் போது 20 லட்சம் என்பது மிகக் குறைவு தான்.

எனினும், இந்த பிரசாரத்தை மாபெரும் இயக்கமாக மாற்றும் வகையில் பிரதமர் மோடி தீவிரப்படுத்தி வருகிறார். இது எந்த அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com