
வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அறிவித்துள்ளார்.
முன்னதாக, சல்மான் கானை காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருந்தார். இதையடுத்து, சல்மான் கான் காங்கிரஸ் கட்சியில் இணையக் கூட வாய்ப்பு இருப்பதாகவும், தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) சல்மான் கான் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், என்னை மையமாகவைத்து பரவி வரும் புரளிக்கு பதிலளிக்க விரும்புகிறேன். நான் தேர்தலில் போட்டியிடப் போவதும் இல்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளப் போவதுமில்லை என்று கூறியுள்ளார்.
சல்மான் கான் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். கடந்த 2009-ஆம் ஆண்டு இந்தூர் மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பங்கஜ் சங்கவிக்கு ஆதரவாக சல்மான் கான் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், அந்தத் தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
இந்தூர் தொகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் இப்போதைய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் எம்.பி.யாக உள்ளார்.
இந்த முறை அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். எனவே, அந்தத் தொகுதி வேட்பாளர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...