
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் ஒரே நபர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிராக 2017-இல் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை 2 வாரங்கள் கழித்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33 (7)-ஆவது பிரிவு ஒரு நபர் இரு தொகுதிகளில் பொதுத் தேர்தலிலும், இடைத் தேர்தலிலும் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கிறது.
ஆனால், அதே சட்டத்தின் 70-ஆவது பிரிவு அவ்வாறு போட்டியிடும் நபர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்கு-ஒரு வேட்பாளர், ஒரு வேட்பாளர் - ஒரு தொகுதி என்பதே ஜனநாயகத்தின் ஆணையாகும். எனவே, ஒரே நபர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பது, அரசமைப்புக்கு எதிரானது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், "ஒரு நபர் ஒரு தொகுதியில் போட்டியிடும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பியுள்ளன. இது தொடர்பாக செயலாற்ற வேண்டியது மத்திய அரசுதான்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பது ஜனநாயகபூர்வமானது. மனுதாரர் அஸ்வினி உபாத்யாய இது தொடர்பாக வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை திருத்துமாறு நீதிமன்றத்தை கேட்கக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த பொதுநல மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எம். எம். சந்தான கெளடர், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்குரைரும், மனுதாரருமான அஸ்வினி உபாத்யாய புதன்கிழமை முறையிட்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு இரண்டு வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...